
இந்த மக்களவைத் தேர்தலுடன் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்; நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்தியில் அடுத்து அமையும் ஆட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆதரவுடன்தான் அமையும். எனவே, மேற்கு வங்க மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தின் மத்திய தினஜ்பூரின் சோப்ராவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால் தேசத்தின் நலன் நாடுபவராக மாறி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகிறார். முன்பு அவர் தேநீர் விற்பவராக இருந்தார். அதன் பிறது திடீரென தன்னை நாட்டின் காவலாளி என்று அறிவித்துக் கொண்டார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பதையே தெரியாத நிலையை நாட்டு மக்கள் உருவாக்குவார்கள்.
நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் மோசமான நிலையில் உள்ளனர். இவற்றையெல்லாம் கவனிக்க பிரதமருக்கு நேரம் இல்லாமல் இருந்தது. கும்பல் வன்முறையில் பலர் அடித்துக் கொலை செய்யப்பட்டபோதும் கூட, அது தொடர்பாக பிரதமர் எந்த ஒரு உறுதியான கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நெருங்கிவிட்டதால், அவருக்கு மக்கள் நலனில் திடீர் அக்கறை ஏற்பட்டுவிட்டது.
இது மிகவும் முக்கியமான தேர்தல். ஏனெனில், இந்தத் தேர்தலுடன் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வரும். மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்றார் மம்தா.