
உலகின் மிகக் காஸ்ட்லியான தேர்தலும், இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலும் இன்று தொடங்கியுள்ளது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் என்றால் அரசியல் கட்சியினருக்கு மட்டும்தான் பரபரப்பு தொற்றிக் கொள்ளுமா? இல்லை பொதுமக்களுக்கும்தான். யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அதற்கு நாங்கள் உதவ முடியாது.
ஆனால் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்துக்கு தீர்வு சொல்ல முடியும்.
எப்படி வாக்களிப்பது என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.
அதே போல உங்கள் பகுதியில் வாக்குச்சாவடி எண் போன்றவற்றையும் முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாக்குச்சாவடிக்கு செல்லும் போது அரசு வலியுறுத்தும் அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தால் சிறப்பு.
வாக்குச்சாவடிக்கு அருகே தேர்தல் அதிகாரிகள் மற்றும் சில கட்சியினரால் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டினை பெற்றுக் கொள்வது வாக்களிப்பதை எளிதாக்கும்.
வாக்குப்பதிவு அறைக்குள் நுழைந்ததும் வரிசையாக சில அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள்.
முதலில் உங்கள் கையில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி சீட்டு போன்றவற்றை ஒரு அதிகாரி சோதிப்பார்.
அடுத்து இருக்கும் அதிகாரியிடம் வாக்குச்சாவடி சீட்டை காண்பித்து, வாக்குப்பதிவுக்கான பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்.
அடுத்த அதிகாரி உங்கள் விரலில் வாக்களித்ததை உறுதி செய்வதற்கான மையை வைப்பார்.
அடுத்த அதிகாரியிடம் கையில் இருக்கும் வாக்குச்சாவடி சீட்டைக் கொடுத்துவிட்டு கையில் மை வைக்கப்பட்டிருப்பதை காண்பித்துவிட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தின் அருகில் செல்லலாம்.
அங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் சின்னத்துக்கு அருகே உள்ள பச்சை நிற பொத்தானை அழுத்த வேண்டும். அப்போது ஒரு பீப் சத்தம் கேட்கும். அதுதான் நீங்கள் வாக்களித்ததை உறுதி செய்வதாகும்.
அங்கே வைக்கப்பட்டிருக்கும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் ஒரு துண்டு பேப்பர் நீங்கள் பார்க்கும் வகையில் வரும். அதில் நீங்கள் வாக்களித்தவரின் பெயர், எண், சின்னம் ஆகியவை 7 நொடிகள் வரை காட்சிப்படுத்தப்படும். பிறகு அது தானாகவே சீல் வைக்கப்பட்ட விவிபேட்டின் பெட்டியில் விழுந்துவிடும்.
நீங்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க விரும்பினால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசியில் இருக்கும் நோட்டாவை தேர்வு செய்து உங்கள் வாக்கினைப் பதிவு செய்யலாம்.
சில குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்..
நீங்கள் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டிய தொகுதியில் இருந்தால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உங்கள் வாக்கினை செலுத்த வேண்டும்.
உங்கள் தொகுதியில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால், இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும், இரண்டில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயர் எந்த வாக்கு இயந்திரத்தில் இருக்கிறது என்பதை தேடித்தான் வாக்கினை செலுத்த வேண்டும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G