
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் பாஜக சார்பில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்தின் ஆதரவாளர்களிடம் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்தை கூறவேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கமல் நாத்தின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த திங்கள்கிழமை வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.281 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து நேரடி வரிகளின் மத்திய வாரியம் கூறுகையில், வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது ரூ.20 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இந்த தொகையானது, தில்லியிலுள்ள முக்கிய அரசியல் கட்சியின் தலைமையிடத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அநேகமாக அந்த தொகை தில்லி துக்ளக் சாலையில் வசித்து வரும் முக்கிய நபரின் இல்லத்திலிருந்து வந்திருக்கக்கூடும் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
இதை மேற்கோள் காட்டி செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இரானி கூறியதாவது: காவலாளியே திருடன் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி துக்ளக் ரோட்டில் இருந்து யார் மூலமாக மத்தியப் பிரதேசத்துக்கு அந்தப்பணம் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்க வேண்டும். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கும், ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை கொள்ளையடித்து பதுக்கி வைத்த பணம் தானா என்பதையும் காங்கிரஸ் விளக்க வேண்டும்.
கமல் நாத்தின் ஆதரவாளர்கள் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.280 கோடி ரொக்கம் மற்றும் சொத்துக்கள் குறித்து இதுவரை ராகுல் காந்தி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த உண்மையை கூறாமல் ராகுல் காந்தி அமைதி காத்து வருவது வியப்பை அளிக்கிறது என்றார் அவர்.
அமேதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனுத் தாக்கல்: உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து களம் இறங்கியுள்ள ஸ்மிருதி இரானி ஊர்வலமாக சென்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சென்று மனுத்தாக்கல் செய்தார்.