
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் நிதி பத்திரங்கள் திட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், அதன் மீதான தீர்ப்பை வெள்ளிக்கிழமை (ஏப். 12) வழங்க உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க விரும்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) குறிப்பிட்ட கிளைகளில், அளிக்க விரும்பும் நன்கொடைக்கு ஏற்ப தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கி, அதைக் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி விட வேண்டும்.
இதன்மூலம், தங்களுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தெரியவராது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் பெயரில், கருப்புப் பணம் புழக்கத்தில் இருப்பதைத் தடுக்கவே இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய அரசு கூறிவந்தது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி அரசு சாரா நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தேர்தல் நிதி பத்திரத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றோ அல்லது அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியுள்ளோரின் விவரங்களைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்றோ உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், தேர்தல் நிதி பத்திரத் திட்டம், மத்திய அரசின் கொள்கை ரீதியிலான முடிவு. கொள்கை ரீதியிலான முடிவுகளுக்காக அரசைக் குற்றம் சாட்டமுடியாது. மக்களவைத் தேர்தல் முடிவடைந்தபிறகு, இத்திட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விரிவாக ஆராயலாம் என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும், வெள்ளிக்கிழமை (ஏப். 12) தீர்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.