
பிரதமர் மோடியை கழுதை என்று விமர்சித்துப் பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அர்ஜுன், பிரதமர் மோடி 56 அங்குலத்தில் மார்பு உடையவர் என்று பாஜகவினர் புகழ்ந்து பேசி வருவதை கடுமையாக விமர்சித்தார். அப்போது, ஒரு சராசரி மனிதருக்கு 36 அங்குலம்தான் மார்பளவு இருக்கும். உடற்பயிற்சி செய்து கட்டுடலை வைத்திருப்பவர்களுக்கு 42 அங்குலத்தில் மார்பு இருக்கலாம். ஆனால், 56 அங்குலத்தில் மனிதர்கள் யாருக்கும் மார்பு இருக்காது. கழுதைகளுக்குதான் 56 அங்குலத்தில் மார்பு இருக்கும். அந்த அளவைக் கூறிக் கொள்பவர்கள் கழுதையாக இருக்கலாம். அடுத்ததாக எருமை மாடுகளுக்கு 100 அங்குலத்தில் மார்பு இருக்கும்.
இதனைப் புரிந்து கொள்ளாமல், தங்கள் தலைவர் 56 அங்குலம் மார்பு கொண்டவர் என்று கூறும்போது பக்தர்கள் (மோடியின் ஆதரவாளர்கள்) எப்படி மகிழ்ச்சியடைகிறார்கள் என்று தெரியவில்லை என்று அர்ஜுன் பேசினார். எனினும், அவர் மோடியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. அவரது இந்தப் பேச்சு குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மேலும், குஜராத் மாநில பாஜக சட்டப் பிரிவு, தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அரசமைப்புச் சட்டப்படி முக்கியப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பொதுக் கூட்டத்தில் தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். எனவே, அவர் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.