
உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்கள் 4 பேரின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு போட்டியிட பாஜகவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில், ரீட்டா பகுகுணா ஜோஷி, சத்யதேவ் பச்சௌரி, எஸ்.பி. சிங் பகேல், முகுத் பிகாரி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் 4 பேரின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மக்களவைத் தேர்தலில் அவர்களை வேட்பாளர்களாக பாஜக களமிறக்கியுள்ளது.
இதில் ரீட்டா பகுகுணா ஜோஷி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் லக்னௌ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை அலாகாபாத் தொகுதி வேட்பாளராக பாஜக தற்போது களமிறக்கியுள்ளது.
இதேபோல், கான்பூர் தொகுதி வேட்பாளராக அமைச்சர் சத்யதேவ் பச்சௌரி, ஆக்ரா தனித் தொகுதி வேட்பாளராக எஸ்.பி. சிங் பாகேல், அம்பேத்கர் நகர் தொகுதி வேட்பாளராக அமைச்சர் முகுத் பிகாரி ஆகியோரை தனது வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
கோரக்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜவாதி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவரும், பாஜகவில் அண்மையில் இணைந்தவருமான பிரவீண் நிஷாத், சாந்த் கபீர் நகர் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. சந்த் கபீர் நகர் தொகுதி எம்.பி.யும், அண்மையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை காலணியால் தாக்கி சர்ச்சையில் சிக்கியவருமான சரத் திரிபாதிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அவரது தந்தையான
ரமாபதி ராம் திரிபாதியை தேவ்ரியா தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...