கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், புதிய விசாரணை நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரிகள் மட்டத்திலான எஸ்எஸ்சி தேர்வுகள் நடைபெறும் என மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு என்பதால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், தேர்வுக்கு சில தினங்களே இருக்கும்போது தேர்வுக்கான வினாத்தாள் வெளியானது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் தேர்வை நிறுத்தி வைக்கவும், மறுதேர்வு நடத்தக் கோரி வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் எஸ்.ஏ.நசீர் கொண்ட அமர்வு, தேர்வை ரத்து செய்தும், மறுதேர்வு நடத்தவும் உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, மறுதேர்வு கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்தது.
இதனிடையே, இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு கடந்த முறை உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இதுவரையிலும் அந்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யாததால், அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஏற்கனவே வழக்கு தொடர்பான அறிக்கைகளை மூன்று முறை தாக்கல் செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்ட உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கூறும்போது, தேர்வாணைய வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பான விரிவான புதிய விசாரணை அறிக்கையை வரும் 23ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து, 24ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.