
உத்திரப்பிரதேச மாநிலம், காஜிப்பிரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை என்றும், மோடியின் ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்றும், நாட்டுக்கு எதிராக முழக்கம் எழுப்புவோரை சிறையில் அடைக்க முடியாது என பேசியிருந்தார்.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில் பதில் அளித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை என்று கூறும் அமித் ஷாவுக்கு, கடந்த 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த 3 போர்களிலும் நாட்டை பாதுகாப்பாக வைத்திருந்தது யார்..?
மேலும் மோடி, அமித் ஷா போன்றோர் வருவதற்கு முன்பு கூட நாடு பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஏனென்றால் நமிமிடம் திறமையான கட்டுக்கோப்பான தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை இருந்தது.
நாட்டில் உள்ள பல்வேறு சமூக மக்களான பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மையினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பாதுகாப்பின்றி இருந்தால், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்?
நாட்டில் உள்ள மக்களை அச்சத்துடன் வைத்தே ஆட்சி செய்துவிட முடியும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் மக்கள் நாட்டுக்காக மனதில் அச்சமின்றி தேர்தலில் வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.