
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுகிறார். எனினும், தேர்தல் ஆணையம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் பேசிய மோடி, "பொதுமக்கள் தங்கள் வாக்குகளை புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானின் பாலாகோட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்' என்றார்.
ராணுவத்தினரின் தியாகத்தை வைத்து மோடி தனது கட்சிக்கு வாக்குச் சேகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா சோதித்தது குறித்து நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். இதுவும் தேர்தல் விதிமீறல் என்று குற்றம்சாட்டப்பட்டது. எனினும், இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதேபோல ஆமதாபாதில் வாக்களித்த பிறகு மோடி வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றதும் தேர்தல் விதிமீறல் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இவற்றைச் சுட்டிக்காட்டி மாயாவதி சுட்டுரையில் (டுவிட்டர்) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி எவ்விதத் தயக்கமும் இன்றி தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அவர் மேலும் துணிவுடன் செயல்பட்டு தேர்தல் விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்.
மேலும், பிரதமர் மோடியை விட்டால் இந்த நாட்டில் வேறு தலைவர்களே இல்லை என்பதுபோலவும், பிரதமர் பதவிக்கு அவர் மட்டுமே தகுதியானவர் என்பதுபோலவும் பாஜகவினர் பேசி வருகின்றனர். இதில் மோடியே கூட தன்னைவிட்டால் பிரதமர் பதவிக்கு வேறு ஆள் கிடையாது என்று பேசியுள்ளார்.
இதற்கு முன்பு கூட ஒருவரை (இந்திரா காந்தி) இதேபோல அவரது ஆதரவாளர்கள் பேசியுள்ளனர். தேர்தலின்போது நாட்டு மக்கள் அவருக்கு உரிய பதிலடி கொடுத்தனர். அதே பாணியில் நாட்டு மக்கள் இப்போதைய பிரதமருக்கும் பதிலடி கொடுப்பார்கள்' என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.