
ரயில் பயணிகளுக்கு தொந்தரவு அளித்ததாக கடந்த 4 ஆண்டுகளில் 73,000-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஓராண்டில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்டோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் ரயில்வே துறையிடம் இருந்து இத்தகவல் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பொதுமக்களிடம் பணம் கேட்டு திருநங்கைகள் தொந்தரவு செய்வது நாடு முழுவதுமே பெரும் பிரச்னையாக உள்ளது.
பணம் கொடுக்க மறுப்பவர்களை மோசமாகத் திட்டுவது, தாக்குவது போன்ற செயல்களிலும் திருநங்கைகள் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து பயணிகள் தரப்பில் இருந்து அதிகம் புகார்கள் வருகின்றன. இதையடுத்து, இதுபோன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த ரயில்வே போலீஸ் படையினர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்' என்றனர்.
திருநங்கைகள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், "2015-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரை ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் 73,837 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015-இல் 13,546 பேரும், 2016-இல் 19,800 பேரும், 2017-இல் 18,526 பேரும், 2018-இல் 20,566 பேரும் ரயில்வே போலீஸாரால் கைதாகியுள்ளனர்.
கடந்த ஜனவரியில் மட்டும் இந்தக் குற்றச்சாட்டில் 1,399 திருநங்கைகள் பிடிபட்டுள்ளனர். ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது. பயணிகளுக்கு தொந்தரவு தருவதுடன், மிரட்டி பணம் பறிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் சில இடங்களில் திருநங்கைகள் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற சூழ்நிலைகளில் கைது செய்வது, வழக்குப் பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது போன்றவை தவிர்க்க முடியாதது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.