ராணுவ காவல் துறையில் பெண்களுக்கு முதல்முறையாக வாய்ப்பு..!

ஆயுதப் படை வரலாற்றில் முதல்முறையாக, ராணுவ காவல் துறையில் காவலர்கள் பிரிவில் பெண்கள் இணைவதற்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
ராணுவ காவல் துறையில் பெண்களுக்கு முதல்முறையாக வாய்ப்பு..!
Updated on
1 min read

ஆயுதப் படை வரலாற்றில் முதல்முறையாக, ராணுவ காவல் துறையில் காவலர்கள் பிரிவில் பெண்கள் இணைவதற்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
ராணுவ காவல் துறையில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து மற்ற பணியிடங்களில் பெண்கள் இதுவரை நியமிக்கப்பட்டதில்லை. ராணுவ காவல்துறையில் முதல்முறையாக காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பிரிவில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
ராணுவ காவல் துறையில் காவலராக சேர விரும்பும் பெண்கள் வியாழக்கிழமை(ஏப்ரல் 25) முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  தகுதியுள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கு  ஜூன் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். ராணுவ தலைமை தளபதியாக விபின் ராவத் பொறுப்பேற்ற பிறகு, பெண்களை ராணுவ காவல் துறையில் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றனர்.
முன்னதாக, ஆயுதப்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில், ராணுவ காவல் துறையில் பெண்களை இணைக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவை கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 
ராணுவ காவல் துறையில் உள்ள மொத்த பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்களில் பெண்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.  ராணுவத்துக்கு தேவைப்படும் நேரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பெண் ராணுவ காவலர்களின் பணிச்சூழல் இருக்கும். 
ராணுவ சட்டதிட்டங்களை வீரர்கள் மீறாது பாதுகாப்பது, போர் காலங்களில் சரக்கு போக்குவரத்தை மேற்கொள்வது, போர்க்கைதிகளை கையாள்வது, உள்ளூர் காவல் துறையினருக்கு தேவைப்படும்போது உதவி புரிவது உள்ளிட்டவை  ராணுவ காவல் துறையினரின் பணிகளாகும்.
ராணுவத்தில் மருத்துவம், கல்வி, சட்டம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் மட்டுமே பெண்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டனர். ஆண்கள் மட்டுமே பணியாற்றும் ராணுவ காவல் துறையின் காவலர் பணியிடங்களில் பெண்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கடந்த ஆண்டு கூறியது இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
ராணுவத்தில் 3. 80 சதவீதமும், விமானப்படையில் 13. 09 சதவீதமும், கடற்படையில் 6 சதவீதமும் மட்டுமே பெண்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com