வாராணசியில் மோடி பேரணி

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாராணசியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், தனது வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னதாக, வாராணசி நகரில் அவரது தலைமையில் மாபெரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவிய பண்டித மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்து மோடி பேரணியைத் தொடங்கினார். திறந்த வாகனத்தில் சென்ற அவரை, சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த ஆதரவாளர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர். அவர்களை நோக்கி கையசைத்து மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். லங்கா, அஸி ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 7 கி.மீ. வரை சென்ற பேரணி, தசஸ்வமேத் படித்துறையில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற "கங்கை ஆரத்தி' நிகழ்ச்சியை மோடி தரிசனம் செய்தார்.
முன்னதாக, இந்தப் பேரணி குறித்து மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பிகாரில் உள்ள தர்பங்கா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்று விட்டு, நான் மிகவும் நேசிக்கும் காசியை நோக்கி பயணிக்கிறேன். அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. காசி நகரைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று வேட்புமனு தாக்கல்: வாராணசியில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். 
இந்த நிகழ்வில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவர்களைத் தவிர, அதிமுக, அப்னா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்

வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டில் போட்டியிட்ட அஜய் ராயையே காங்கிரஸ் மீண்டும் களமிறக்கியுள்ளது. இதன் மூலம் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. சிலநாள்களுக்கு முன்பு ரேபரேலி தொகுதியில் பிரியங்கா பிரசாரம் செய்தபோது, அவர் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தினர். அப்போது, "நான் வாராணசி தொகுதியில் போட்டியிடக் கூடாதா' என்று  அவர்களை நோக்கி பிரியங்கா கேள்வி எழுப்பினார். பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கட்சி விரும்பினால் வாராணசி தொகுதியில் போட்டியிடுவேன்' என்று பிரியங்கா பதிலளித்தார். இதையடுத்து, அவர் வாராணசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வாராணசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வாராணசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவர். அப்போது மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தை அஜய் ராய் பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. அந்தத் தேர்தலில் மோடி 5.81 லட்சம் வாக்குகளும், கேஜரிவால் 2.09 லட்சம் வாக்குகளும் பெற்றனர். அஜய் ராய்க்கு 75,615 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் வாராணசி தொகுதி சமாஜவாதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சமாஜவாதியில் இணைந்த ஷாலினி சிங் வாராணசி தொகுதி வேட்பாளராக அக்கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com