
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில், பதின்வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண், சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்க பல்வேறு குழுக்களை சிபிஐ அமைத்துள்ளது.
இந்நிலையில், சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு சனிக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, சாலை விபத்து தொடர்பாக செங்கரிடம் பல மணிநேரங்கள் அவர்கள் விசாரணை நடத்தினர்.
துப்பாக்கி உரிமம் ரத்து: செங்கரிடம் இருந்த துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்வதாக மாநில அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பாக, உன்னாவ் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ""செங்கரிடமுள்ள துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, அவரிடமிருந்த துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்துள்ளோம். செங்கரின் 3 துப்பாக்கிகளையும் ஒப்படைக்கும்படி அவரது குடும்பத்தினரை வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.
மீண்டு வருவார்...: இதனிடையே, தனது பிரச்னைகளிலிருந்து செங்கர் விரைவில் மீள வேண்டுமென பாஜக எம்எல்ஏ ஆசிஷ் சிங் ஆஷு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள விடியோவில், ""கடினமான நாள்களை சகோதரர் செங்கர் அனுபவித்து வருகிறார். எனது வாழ்த்துகள் எப்போதும் அவருடன் இருக்கும். அவர் விரைவில் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
எனினும், ஆசிஷ் சிங்கின் கருத்து தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இது அவரது தனிப்பட்ட கருத்தாகும். பாஜகவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை. சட்டத்தால் ஒருவர் தண்டிக்கப்படும் வரை, அவர் நிரபராதியே. இந்தக் கண்ணோட்டத்தில் ஆசிஷ் சிங் தனது கருத்தைத் தெரிவித்திருக்க வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
பிரியங்கா நன்றி: இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக, உத்தரப் பிரதேசம் முழுவதும் மக்களிடையே கையெழுத்து பெறும் இயக்கத்தை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா நன்றி தெரிவித்தார்.