
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேச அனுமதி தராமல் பாகிஸ்தான் இழுத்தடித்து வருகிறது.
பாகிஸ்தானில் உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு (49)அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து இந்தியா தொடுத்த வழக்கை விசாரித்த ஐ.நா. சர்வதேச நீதிமன்றம், மரண தண்டனையை மறுபரிலீசனை செய்யும்படியும், எந்த தாமதமுமின்றி குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டுமென்றும் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சந்தித்துப் பேச அனுமதிப்பதாகவும், இதற்காக இந்தியாவின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் பாகிஸ்தான் வியாழக்கிழமை அறிவித்தது. அப்போது பாகிஸ்தான் தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிபந்தனைகளில், குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேசும்போது பாகிஸ்தான் அதிகாரி ஒருவரும் உடனிருப்பார் என்ற நிபந்தனையும் ஒன்று எனத் தெரிகிறது.
இதற்கு இந்தியா உடன்படவில்லை. இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில், "குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேசுவதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது; ஐ.நா. சர்வதேச நீதிமன்ற உத்தரவின்படி குல்பூஷணை தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிபந்தனை விவகாரத்தால், இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, குல்பூஷண் ஜாதவை வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்துப் பேசும் திட்டம் நிறைவேறவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...