
உலகில் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறுவதற்கு, கல்வி மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறுவதற்கு, "எம்பிஏயுனிவெர்ஸ்.காம்' என்ற இணையதளம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு மூலமாக, பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
நிபுணர்களின் கருத்துகளை அந்த இணையதளம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2000-2006 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) இருமடங்காக உயர்ந்தது. அந்த சமயத்தில் பொறியியல் கல்வி மற்றும் மேலாண்மை கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்திருந்தது. அதுபோல, இப்போதும் இந்தியாவின் ஜிடிபியை இருமடங்காக்க வேண்டும். அதற்காக கல்வி மற்றும் மனிதர்களின் திறன் மேம்பாட்டில் அதிக அளவில் அரசு முதலீடு செய்ய வேண்டும்.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் 35 சதவீதமாக்க வேண்டும். 2035-ஆம் ஆண்டுக்குள், அந்த விகிதம் 50 சதவீதமாக உயர வேண்டும். இந்தியாவில் தற்போது 950 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 2025-ஆம் ஆண்டுக்குள் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையில் பாதியை நாம் எட்ட முடியும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பயன்படுத்தி, தொலைதூரக் கல்வி முறை, ஆன்லைன் மூலம் படிப்பது ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலமாக மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் அமித் அக்னிஹோத்ரி கூறுகையில், "வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டின் மக்கள்தொகை 140 கோடியாக அதிகரித்திருக்கும். அதற்கேற்றவாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் நாம் முதலீடு செய்ய வேண்டும். பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதத்தை 35 சதவீதமாக மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், ரூ. 350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற இலக்கு நிறைவேறும்' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...