
மும்பையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் சனிக்கிழமை கன மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்துக்கு மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய கன மழை சனிக்கிழமையும் நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மத்திய மும்பை மற்றும் துறைமுகம் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
நண்பகலில் வெள்ள நீரின் அளவு அதிகரித்த காரணத்தால் குர்லா மற்றும் சயன் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
எனினும், மும்பை விமான நிலையத்தில் விமானங்களின் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிருஹண் மும்பை மாநகராட்சியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால் மலாட், அந்தேரி, தஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது' என்றார்.
மத்திய ரயில்வே முதன்மை செய்தித் தொடர்பாளர் சுனில் உதாசி கூறுகையில், "மும்பை புறநகர் ரயில்கள் கவனத்துடன் கூடிய மிதமான வேகத்தில் இயக்கப்பட்டன.
வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக குர்லா-சயன், குர்லா-சுனாபட்டி நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இதனிடையே, மும்பை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் கே.எஸ்.ஹோஸாலிகர், டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "மும்பை, தாணே, நவிமும்பை பகுதிகளில் அடுத்த 24 முதல் 36 மணிநேரத்தில் மழை தீவிரமடையும். எனவே, பொதுமக்கள் வெளியே செல்வதையும், கடற்கரைக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
தாணே நகரில் மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் கோலே என்ற 18 வயது இளைஞர் இறந்தார்.
இதே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் பேக்கரி ஒன்றின் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்கரில் அணை திறப்பு: பால்கர் மாவட்டத்தில் கன மழை காரணமாக பல்வேறு கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் சிலவற்றை வெள்ள நீர் காரணமாக மூட வேண்டியிருந்ததாக அதிகாரிகள் கூறினர். அதிகரித்து வரும் நீர்மட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி சூர்யா அணை திறந்து விடப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாசிக்கிலும் கனமழை:
மும்பையை அடுத்துள்ள நாசிக் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கங்காபூர் அணை 87 சதவீதமும், கங்காபூர் அணை 88 சதவீதமும் நிரம்பியுள்ளன.
இந்த மாவட்டத்தில் கோதாவரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.