பாஜக மூத்த தலைவர்கள் இறப்புக்கு எதிர்க்கட்சிகளின் தீய சக்திகள் காரணம்: பிரக்யா சிங் தாக்குர் பரபரப்பு கருத்து

பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரது இறப்புக்கு எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்ட தீய சக்திகள்தான் காரணம் என்று போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் குற்றச்சாட்டியுள்ளது
போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் மறைந்த பாஜக மூத்த தலைவர்கள் படத்துக்கு அஞ்சலி செலுத்திய பிரக்யா சிங் தாக்குர்
போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் மறைந்த பாஜக மூத்த தலைவர்கள் படத்துக்கு அஞ்சலி செலுத்திய பிரக்யா சிங் தாக்குர்
Updated on
1 min read


பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரது இறப்புக்கு எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்ட தீய சக்திகள்தான் காரணம் என்று போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் குற்றச்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 6-ஆம் தேதியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 26-ஆம் தேதியும் மறைந்தனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், அந்த மாநில பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கெளரும் கடந்த வாரம் உயிரிழந்தார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மாநில பாஜக சார்பில் அருண் ஜேட்லி, கெளர் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரக்யா சிங் தாக்குர், கடந்த மக்களவைத் தேர்தலின்போது நான் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தேன். அப்போது, பாஜக மீது சில தீய சக்திகளை எதிர்க்கட்சிகள் ஏவிவிட்டுள்ளதாகவும், இதனால், கட்சி சில இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்றும் துறவி ஒருவர் என்னிடம் கூறினார். பின்னர் அதனை நான் மறந்துவிட்டேன். ஆனால், இப்போது பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக மறைந்து வருவதைப் பார்க்கும்போது, அந்த துறவி கூறியது எனக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. அவர் கூறியது சரியாகத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது என்றார்.

பிரக்யாவின் இந்த சர்ச்சைக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சாத்வி பிரக்யா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். குறிப்பாக, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையில், என்னைத் துன்புறுத்திய மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சபித்த காரணத்தால்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார் என்று பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது; அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், அதற்காக பெருமிதம் கொள்வதாகவும் கூறியது;  நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று பேசியது ஆகியவை அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com