
பெங்களூரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது பேஸ்புக் காதலனை பற்றித் தெரிந்துகொள்ள போபால் வரை பயணம் செய்துள்ளார்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக மலரும் காதல்கள் குறித்த செய்திகள் அதிகமாக வருகின்றன. அதேபோன்று பேஸ்புக் மூலமாக ஏற்படும் காதல்கள் பெரும்பாலாக பிரச்னைகளில் முடிவடைவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அந்த வகையில், 10ம் வகுப்பு மாணவி ஒருவர் பேஸ்புக்கில் ஒருவரை காதலித்து ஏமாற்றம் அடைந்துள்ளது அவரது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களுருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பேஸ்புக் மூலமாக ஒருவர் நண்பராகியுள்ளார். இந்த நட்பு பின்னர் காதலாக மாற, இருவரும் பேஸ்புக்கிலே பேசிப் பழகி வந்தனர்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்பட்ட காதல் என்பதால், தனது காதலர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்துகொள்ள அவர், பெங்களுருவில் இருந்து போபாலுக்கு தனியாகவே பயணம் செய்துள்ளார். மேலும், தான் வருவது குறித்து காதலருக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக சென்றுள்ளார்.
தொடர்ந்து போபாலில் காதலரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், காதலரின் வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்காத நிலையில், அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அந்த பெண் தங்கியுள்ளார்.
பின்னர் பெங்களூருவுக்குச் செல்ல அந்த பெண்ணை காதலர் வற்புறுத்தவே, அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண், ஹோட்டலை விட்டு வெளியேறி அங்கு சாலைகளில், வீதிகளில் அலைந்து திரிந்துள்ளார். இதனை கவனித்த அம்மாநில போலீசார், மாணவியை குழந்தைகள் நலத்துறை கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் கமிட்டி அதிகாரிகள், மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து, அவர் வந்து தனது மகளை அழைத்துச் சென்றனர்.