சுடச்சுட

  

  காஷ்மீர்: சர்வதேச ஊடகங்கள் தவறான செய்தி- பிரகாஷ் ஜாவடேகர்

  By DIN  |   Published on : 31st August 2019 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prakas


  காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து சில சர்வதேச ஊடகங்கள் தவறான செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டு வருவதாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, அதிக பதற்றம் நிறைந்த காஷ்மீர் பள்ளதாக்குப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனினும், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன.

  இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் மலையாள மனோரமா பத்திரிகை சார்பில் வெள்ளிக்கிழமை புதிய இந்தியாவில் அரசும் ஊடகமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜாவடேகர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

  காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறுவது தவறு. பல்வேறு முக்கிய நாளிதழ்கள், தொலைகாட்சி சேனல்களின் நிருபர்கள் அங்கு களத்தில் உள்ள நிலவரங்களை அறிந்து செய்தி அளித்து வருகின்றனர். ஸ்ரீநகர் வானொலியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காஷ்மீரிலும் செய்தித்தாள்கள் வெளியாகி வருகின்றன.

  காஷ்மீரில் எவ்வித பிரச்னையும் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால்தான் மத்திய அரசு அங்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது காஷ்மீர் இப்போது பெரிய அளவில் பதற்றம் ஏதுமின்றி அமைதியாக இருக்கிறது. அங்குள்ள கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
  காஷ்மீரில் சர்வதேச ஊடகங்களும் களத்தில் உள்ளன. அவற்றில் சில காஷ்மீர் நிலவரம் குறித்து தவறான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், அது தவறு என்பது உடனுக்குடன் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அரசின் பக்கம் உள்ளனர். எனவே, எத்தனைப் போலி செய்திகளை வெளியிட்டாலும் அது எடுபடாது.

  காஷ்மீரில் 10,000 பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றதாக ஒரு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால், அதில் ஒன்று கராச்சியில் நடைபெற்றது என்பதும் மற்றொன்று காஷ்மீரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகம் எது என்பதும் வெளிப்பட்டுவிட்டது. இதன் மூலம் அந்த செய்தி நிறுவனம் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவிடும்.

  ஊடக சுதந்திரத்தைக் காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 1975-ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது எங்கள் கட்சித் தலைவர்கள் ஊடக சுதந்திரத்துக்காக போராடினர். நானும் அப்போது போராட்டக்களத்தில் இருந்தேன். எனவே, ஊடக சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும். நமது நாட்டில் இப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளும், 700-க்கும் மேற்பட்ட காட்சி ஊடகங்களும் உள்ளன. இது தவிர இணையதள செய்தி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. மேலும், சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முடிகிறது. எனவே, யாருடைய கருத்தையும் மூடி மறைக்க முடியாது.

  அதே நேரத்தில் செய்திகளை வெளியிடுவதில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். நமக்கு அளிக்கப்பட்ட ஊடக சுதந்திரத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் சிறப்பாக செயல்பட கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆனால், அது தேசத்துக்கு எதிராக திரும்பக் கூடாது என்றார் ஜாவடேகர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai