பொதுத் துறை வங்கிகள் இனி 12 மட்டுமே : நிதியமைச்சர் அறிவிப்பு

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  உடன் நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார்
தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  உடன் நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார்


வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். 

பொதுத் துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, இந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் கூறியதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை இணைக்கப்படுகின்றன.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
இதேபோல், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை பிராந்திய அளவில் வலுவாக இருப்பதால் அவை இப்போதுபோல் தனியாகவே இயங்கும். இதேபோல், பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் தனித்தே இயங்கும். 

நிகழாண்டின் தொடக்கத்தில், பாங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. அதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள், பாரதிய மகிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. வங்கிகளை ஒன்றிணைப்பதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்த 27 வங்கிகள் தற்போது 12 வங்கிகளாகக் குறையும். 
இந்த வங்கிகளுக்கு போதிய அளவில் மூலதன நிதி அளிக்கப்படும். பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ. 70,000 கோடி வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிதியை நிகழ் நிதியாண்டிலேயே வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

வங்கி வாரியத்துக்கு அதிகாரம்: வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப் பிறகு, வங்கிகள் வாரியத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். வங்கிகளின் பொது மேலாளர் பதவிக்கு மேலான பொறுப்புகளை வகிக்கும் அலுவலர்களின் பணித்திறனை மதிப்பிடுவதற்கு வங்கிகள் வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்படும். இதுதவிர, அலுவல் தேவைக்கு ஏற்ப தலைமை பொது மேலாளரை நியமிப்பதற்கு வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.

வாராக் கடன் குறைந்தது: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்துள்ளது. கடந்த 2018-இன் டிசம்பர் இறுதியில் ரூ.8.65 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், 2019-இன் மார்ச் மாத இறுதியில் ரூ.7.9 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிப்பது மேம்பட்டுள்ளது என்றார் அவர்.

பணிச்சூழல் மேம்படும்: பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைப்பதால் ஊழியர்களின் பணிச்சூழல் மேம்படும் என்று நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
வங்கிகளின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில், இந்த நடவடிக்கையால், ஊழியர்களின் பணிச்சூழல் மேம்படும் என்றார் அவர்.

2-ஆவது இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி: வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப் பிறகு, ரூ.17.94 லட்சம் கோடி வர்த்தகத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டாவது இடத்தில் இருக்கும். முதலிடத்தில், ரூ.52.05 லட்சம் கோடி வர்த்தகத்துடன் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா ரூ.16.13 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ரூ.15.2 லட்சம் கோடி வர்த்தகத்துடன் கனரா வங்கி  நான்காவது இடத்திலும், ரூ.14.59 லட்சம் கோடி வர்த்தகத்துடன் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஐந்தாவது இடத்திலும் இருக்கும். ரூ.8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் இந்தியன் வங்கி 7ஆவது இடத்தில் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், வங்கிகள் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும், ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்கவும் கடந்த வாரம் சில அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com