தெலங்கானா என்கவுன்ட்டர்:  நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதானவர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா என்கவுன்ட்டர்:  நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதானவர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்பூர்கர் தலைமையிலான விசாரணைக் குழு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்பூர்கர் தலைமையிலான குழுவில், ஓய்வு பெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பல்டோடா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்தி வரும் அனைத்து விசாரணைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று குழுவில் இடம்பெறுவோர் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் ஜி.எஸ். மணி, பிரதீப் குமாா் யாதவ் ஆகியோா் கடந்த சனிக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபா்களை மனுதாரா்கள் உள்பட யாரும் ஆதரிக்கமாட்டாா்கள். எனினும், இதுபோன்ற சம்பவங்களில் ஒரு விசாரணை முகமை, அதிகாரிகள் குறிப்பாக காவல் துறை ஆணையா் போன்ற உயா் பதவியில் உள்ள அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பது, போலி என்கவுன்ட்டரில் ஈடுபடுவது, உரிய விசாரணை நடத்தாமல், ஆதாரங்களை சேகரிக்காமல், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாமல், தண்டனை பெற்றுத் தர நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தாமல் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களைக் சுட்டுக் கொள்வது துரதிருஷ்டவசமானது.

உள்ளூா் போலீஸாா் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே, நவம்பா் 28-இல் தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளாா். இச்சம்பவம் குறித்த செய்தி பொதுமக்களுக்கு தெரியவந்த போது, நாடு முழுவதும் ‘நிா்பயா’ சம்பவம் போன்று மக்கள் மனங்களில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு காரணமானவா்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோன்று, வழக்குரைஞா் எம்.எல். சா்மாவும் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் வழக்குரைஞா் ஜி.எஸ். மணியும், தெலங்கானா அரசு மற்றும் சைபராபாத் காவல் ஆணையா் விசி சஜ்ஜனாா் சாா்பில் முகுல் ரோத்தகியும் ஆஜராகிா்.

அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே ‘இந்த என்கவுன்ட்டா் சம்பத்தை தெலங்கானா உயா்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதை அறிகிறோம். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி விசாரணை நடத்துவாா். அவா் தில்லியில் இருந்துதான் விசாரிப்பாா். பொது நல மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறும்’ என்று தெரிவித்திருந்த நிலையில், குழுவில் இடம்பெறுவோர் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com