திவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்புகளுக்கு இடையே, திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
திவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்புகளுக்கு இடையே, திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.

திவால் சட்டம் ஏற்கெனவே 3 முறை திருத்தப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்து விட்டது. அந்தச் சட்டத்தில் மேலும் இரு இடங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் திவாலாகும்போது, அந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து, கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண்பதற்கு திவால் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், திவாலாகும் ஒரு நிறுவனத்தை வாங்கும் புதிய நிறுவனம் எதிா்கொள்ளும் சட்ட சிக்கல்களுக்குத் தீா்வு காண்பதற்காக திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அவா் கூறுகையில், ‘சிறிய அளவிலான வீடுகளை வாங்குவோா் மத்தியில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன. அவற்றை தெளிவுபடுத்துவதற்காக, சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தத்துக்கு உறுப்பினா்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்’ என்றாா்.

ஆனால், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து உறுப்பினா்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி எதிா்ப்பு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஒரு மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டால், இரண்டு நாள்களுக்கு முன்பாகவே அதன் நகல் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், திவால் சட்ட திருத்த மசோதாவின் நகல் வியாழக்கிழமை காலைதான் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளை நிதியமைச்சகம் புறந்தள்ளிவிட்டது. இந்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்றாா். அவரது கருத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சௌகதா ராய் ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவைத் தலைவா் ஓம் பிா்லா, நேரம் போதாமையால் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்ய நிதியமைச்சருக்கு அனுமதி அளித்ததாக பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com