'நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி; மன்னிப்புக் கேட்க முடியாது'

மன்னிப்புக் கேட்பதற்கு நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி, எனவே மன்னிப்புக் கேட்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
'நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி; மன்னிப்புக் கேட்க முடியாது'

'மன்னிப்புக் கேட்பதற்கு நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி, எனவே மன்னிப்புக் கேட்க முடியாது' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்ற பொதுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 

"நேற்று நாடாளுமன்றத்தில் என்னை மன்னிப்புக் கேட்கும்படி பாஜகவினர் வலியுறுத்தினர். ஆனால், நான் ராகுல் சாவர்க்கர் அல்ல. ராகுல் காந்தி, எனவே, மன்னிப்புக் கேட்க மாட்டேன். உண்மையைப் பேசியதற்கு நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்.

இந்தியாவின் பலமே அதன் பொருளாதாரம்தான். 9 சதவீத ஜிடிபியை நாம் எப்படி அடைந்தோம் என பல்வேறு நாடுகள் நம்மைப் பார்த்து வியந்துள்ளன. ஆனால் இன்றைக்கு வெங்காய விலையே ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் மோடி எனும் ஒற்றை நபரால் சீரழிக்கப்பட்டுள்ளது.

2016-இல் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதை நினைவு கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரம் மீது அவர் ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தில் இருந்து இந்தியாவால் இன்னும் மீள முடியவில்லை.

இந்தியாவின் எதிரிகள் அனைவரும் இந்தியப் பொருளாதாரத்தை சீரழிக்க எண்ணுகின்றனர். அந்தப் பணியை மோடி செய்கிறார். நமது பொருளாதாரத்தைச் சேதப்படுத்த எதிரிகளால் முடியாது. ஆனால் மோடியால் முடியும்.

ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், நாகலாந்து, திரிபுரா ஆகிய இடங்களுக்குப் போய் பாருங்கள். எரிந்துக்கொண்டிருக்கிறது. நாட்டைப் பிரித்து வலிமையற்றதாக்கும் நோக்கத்தில் அரசு செயல்படுகிறது. அதிகாரத்துக்காக மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார்.

நாட்டை வலுப்படுத்துவதற்காகத்தான் நீங்கள் அவரைத் தேர்வு செய்துள்ளீர்கள். ஆனால், அவர் அப்படி செயல்படவில்லை. நமது ஜிடிபி தற்போது 4 சதவீதத்தில் உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. அவர்களுக்கு நாட்டைப் பிரிக்க மட்டும்தான் தெரியும்" என்றார்.

இதையடுத்து, நாட்டைக் காப்பாற்ற அரசுக்கு எதிராக குரல் எழுப்புங்கள் என்று கட்சி நிர்வாகிகளை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, "இந்தியாவில் உருவாக்குவோம் (மேட் இன் இந்தியா) என்று பிரதமர் நரேந்திர மோடி மேடைதோறும் பேசி வருகிறார். ஆனால், இந்தியாவில் பாலியல் வன்முறை சம்பவங்கள்தான் (ரேப் இன் இந்தியா) நடந்து வருகின்றன. அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் வருகின்றன" என்றார்.

இவரது இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி, "மன்னிப்புக் கேட்க முடியாது" என்று கூறினார். மேலும், "பிரதமர் நரேந்திர மோடியும் முன்பு இதுபோல் கருத்து கூறியுள்ளார்" என்றும் அவர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com