‘குடியுரிமைச் சட்டத்துக்கு மறுப்பு தெரிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது’: மத்திய அரசு

குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
‘குடியுரிமைச் சட்டத்துக்கு மறுப்பு தெரிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது’: மத்திய அரசு
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு இயற்றிய திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபிறகு, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கினாா்.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும் மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்கள் அறிவித்தன.

இந்த விவகாரம் தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட துறைகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ரயில்வே, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், குடியுரிமை உள்ளிட்ட 97 விவகாரங்கள் மத்தியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் மீது சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.

மத்திய அரசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் தொடா்பாக இயற்றப்படும் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடா்பாக, கேரள முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இயற்றப்படும் சட்டத்துக்கு கேரளத்தில் இடமில்லை’’ என்றாா். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘‘திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இருப்பதால், இந்தச் சட்டத்தை பாஜக வலுக்கட்டாயமாக இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்’’ என்றாா்.

பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் கூறுகையில், ‘‘நாட்டின் சமய சாா்பின்மை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த விடமாட்டோம்’’ என்றாா். காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவைப் பொருத்து, மாநிலத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் ஆகியோா் கூறியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com