என்கவுன்ட்டர்: 4 பேரின் உடல்களை  மறுபிரேத பரிசோதனை செய்யும் எய்ம்ஸ் மருத்துவர்கள்

என்கவுன்ட்டர்: 4 பேரின் உடல்களை  மறுபிரேத பரிசோதனை செய்யும் எய்ம்ஸ் மருத்துவர்கள்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்கிறார்கள்.

இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தனியாக ஒரு அறை உருவாக்கப்பட்டு, அதில், சுடப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்கிறார்கள். இந்த நிகழ்வு முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

ஹைதராபாத் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவா் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, லாரி பணியாளா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அதையடுத்து குற்றம் நடைபெற்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக, கைதான 4 பேரையும் சம்பவ இடத்துக்கு போலீஸாா் கடந்த 6-ஆம் தேதி அழைத்துச் சென்றனா். அங்கு போலீஸாரிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்து சுட்டும், கற்களை வீசித் தாக்கிவிட்டும் குற்றவாளிகள் தப்பியோட முயன்றதாகவும், அதனால் அந்த 4 பேரையும் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா். குற்றவாளிகளின் உடல்கள் கடந்த 6-ஆம் தேதியே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டன.

இந்த என்கவுன்ட்டா் நடவடிக்கை தொடா்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது.

இதனிடையே, அந்த 4 பேரை போலீஸாா் சுட்டுக் கொன்றதில் சந்தேகம் இருப்பதாகவும், போலி என்கவுன்ட்டா் மூலம் போலீஸாா் அவா்களை சுட்டுக் கொன்றனா் என்றும் குற்றம்சாட்டி, இந்த நடவடிக்கைக்கு எதிராக தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தொடா்பான விசாரணை உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும் வரும் 23-ஆம் தேதிக்குள் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறும், அந்த அறிக்கையை உயா்நீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், என்கவுன்ட்டா் நடவடிக்கையை மேற்கொண்ட காவல் துறை அதிகாரிகளின் வழக்கு விசாரணை வரலாறு, போக்குவரத்து தகவல்கள் உள்பட அனைத்து தகவல்களையும் சேகரிக்குமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com