தேசியம் 2019

அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவு பிறப்பிப்பு.
தேசியம் 2019


ஜனவரி

7:    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்.

15:    அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவு பிறப்பிப்பு.

23:    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கான அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமனம்.

24:    இஸ்ரோ சார்பில் மைக்ரோசாட்-ஆர், கலாம்சாட்-வி 2 ஆகிய செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி 44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிப்ரவரி

8:    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவரது உருவச் சிலைகளை அமைக்கவும், யானை சின்னத்தின் சிலையை நிறுவுவதற்காக 
செலவிட்ட  அரசு நிதி ரூ. 2 ஆயிரம் கோடியைத் திருப்பிச் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

14:    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் போலீஸார் உயிரிழந்தனர். தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் பயங்கரவாதி அடில் அஹமது தார் உடல் சிதறி உயிரிழந்தார்.

15:    பெங்களூரில் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக லெப்டினன்ட் ஹீனா ஜெய்ஸ்வால் தேர்வு.

15:    தில்லியில் இருந்து வாராணசிக்கு "வந்தே பாரத்' (ரயில் 18) விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இது, நாட்டின் முதல் என்ஜின் இல்லாத விரைவு ரயிலாகும்.

24:    நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தை, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இத்திட்டத்தால், ஆண்டுக்கு ரூ. 6ஆயிரம் வீதம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.

25:    சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தில்லி இந்தியா கேட் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.  

26:    புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாள்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு.

27:    பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு. அதில், ஒரு விமானத்தில் இருந்த இந்திய விமானப் படை கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார்.

மார்ச்

1:    பிடிபட்ட அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் வாகா-அட்டாரி எல்லையில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ஒப்படைப்பு

5:    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 60 வயது அடைந்த பிறகு தொழிலாளர்கள் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்.

19:    லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பினாகிசந்திர கோஷ் நியமனம்.

20:    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைதாகி, 29-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

ஏப்ரல்

1:    ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவிபுரிய வல்ல "எமிசாட்' செயற்கைக்கோள், வெளிநாடுகளின் 28 செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை ஏந்திச் சென்ற பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட், அவற்றைத் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.

8:    மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வரும் அரசமைப்புச் சட்டத்தின் 370, 35ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது.

12:    தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த, அனுபவமிக்க 9 நபர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செயலர்களாக நியமிக்கப்பட்டனர். ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பதவிகளுக்கு முதல் முறையாகத் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டனர்.

மே

2:    தரமற்ற இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கருவிகளை தயாரித்ததற்காக அதைப் பயன்படுத்திய நோயாளிகளுக்கு இழப்பீடாக தலா ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

8:    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தவறான கருத்து கூறியதற்காக ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

11:    அமெரிக்காவின் அரிசோனாவில் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் இந்திய விமானப் படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் முறைப்படி அளிக்கப்பட்டன.

14:    விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்தது. 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

22:    லெப்டினன்ட் பாவனா காந்த், இந்திய விமானப் படையின் முதல் போர் விமானியாகி சாதனை படைத்தார். 

22:    புவி பரப்பை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் அதிநவீன ரிசாட்-2 பி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது இஸ்ரோ. பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட்டைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

23:    பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

27:    பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

30:    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 15-ஆவது பிரதமராகப் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூன்

1:    நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு. 

11:    விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, அச்சட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஆமதாபாத் தேசிய புலனாய்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்த நபர், மும்பை-புது தில்லி விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக தண்டனை விதிக்கப்பட்டது. விமானம் கடத்தப்படும் என்று கடிதம் எழுதி மும்பையிலிருந்து தில்லி சென்ற விமானத்தில் வைத்த தொழிலதிபர் பிர்ஜு கிஷோர் சல்லாவுக்கு ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

17:    அமித் ஷாவுக்கு மத்திய அமைச்சர்  பதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜகவின் செயல் தலைவராக ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டார். பாஜகவுக்கு செயல் தலைவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

19:    மக்களவைத் தலைவராக பாஜக எம்.பி. ஓம் பிர்லா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

21:    முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் அறிமுகம். 

ஜூலை

3:    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜிநாமா.

14:    கர்தார்பூர் வழித்தடத்தில் நாளொன்றுக்கு 5,000 சீக்கிய யாத்ரீகர்கள் விசா இன்றி பயணிக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

17:    இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

22:    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்3-எம்-1 ராக்கெட் மூலமாக "சந்திரயான்-2' விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

23:    கர்நாடக சட்டப் பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது. முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி ராஜிநாமா. 

25:    உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் "முத்தலாக் தடை மசோதா' மக்களவையில் நிறைவேறியது.
29:    கர்நாடக சட்டப் பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி.

ஆகஸ்ட்

5: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் வகையில் "ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா' மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஆக. 6-இல் நிறைவேறியது.

10:    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு

21:    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது

31:    அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன.

செப்டம்பர்

3:    அப்பாச்சி ஏஎச்-64இ (1) ரகத்தைச் சேர்ந்த 8 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையில் இணைப்பு.

5:    சென்னை ஐஐடி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், கரக்பூர் ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்களுக்கு "தலைசிறந்த கல்வி நிறுவனம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

5:    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்பரத்தை, 14 நாள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு.

5:    ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 74 வயது பெண் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

6:    ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், தெற்கு ஆசிய மக்களின் மூதாதையர்கள் என ஹரியாணாவின் ஹிஸார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மரபணு ஆய்வில் தகவல்.

7:    நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து பிரித்து விடப்பட்ட "விக்ரம்' லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் "விக்ரம்' லேண்டர் விழுந்தது.

8:    தெலங்கானா மாநில ஆளுநராக, தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார்.
10:    இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அஞ்சலி சிங், இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராக ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நியமிக்கப்பட்டார்.

19:     உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் நாட்டிலேயே முதல் முறையாக தேசிய காவல்துறை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

22:    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற "மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்துகொண்டு உரையாற்றினர். போப் ஆண்டவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்காக அதிகம் பேர் கூடிய நிகழ்வு இதுவாகும்.

23:    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக, வெ.இராமசுப்பிரமணியன், கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவியேற்பு. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்வு. 

23:    அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த போனுங் டோமிங் என்ற ராணுவ பெண் அதிகாரி, ராணுவத்தின் முதல் பெண் லெப்டினன்ட் கர்னலாக பொறுப்பேற்று வரலாறு படைத்தார்.

அக்டோபர்

2:    மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடமில்லாத நாடாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

8:    பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த விமானத்தை முறைப்படி பெற்றுக் கொண்டார்.

16:    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அமலாக்கத் துறையால் கைது.

24:    மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றி. பாஜக 105, சிவசேனை 56 இடங்களை கைப்பற்றின. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44, 54 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு கோரியதால், பாஜக-சிவசேனை கூட்டணி, பின்னர் முறிந்தது.

நவம்பர்

9:    உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கில், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

9:    பாகிஸ்தானிலுள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் நுழைவு இசைவு இன்றி பயணம் மேற்கொள்ள வசதியாக கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

12:    மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக குழப்பமும், இழுபறியான சூழ்நிலையும் நீடித்து வந்ததையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

13:    உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகம், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்பின்கீழ் அடங்கும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

17:    உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி (64) இடம்பிடித்தார். கொலீஜியத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் நீதிபதி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

18:    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றார்.

23:    மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் காலை 8 மணியளவில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி முன் பதவியேற்றனர். அவர்கள் பதவியேற்பதற்கு முன் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலையில் திரும்பப்பெறப்பட்டது. பிரதமருக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களின் கீழ் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தல் பெற்றதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

26:    மகாராஷ்டிரத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், நவ. 27-ஆம் தேதி மாநில சட்டப் பேரவையில் ஃபட்னவீஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிட்டது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், தேவேந்திர ஃபட்னவீஸ், அஜித் பவார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
28:    மகாராஷ்டிரத்தின் 18-ஆவது முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். ஆட்சியமைப்பதற்கு ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. 

டிசம்பர்

7:    முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட "அர்ஜுன் எம்கே-1ஏ' பீரங்கியின் சோதனைகள் நிறைவுபெற்று, தயாரிப்பு தொடங்கப்பட்டது.

9:    கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தது.

9:    ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

11:     குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது.

11:    குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில், மாநிலத்தில் அப்போது ஆட்சியிலிருந்த முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்குத் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

11:    50-ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ). பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டில் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

12:     குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமில் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

13:    பெண்கள் மற்றும்  குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவர்களுக்கு 21 நாள்களில் மரண தண்டனை வழங்க வகைசெய்யும் "திஷா' மசோதாவுக்கு ஆந்திர சட்டப் பேரவை ஒப்புதல் வழங்கியது. 

16:    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரி மாணவர்களைக் காவல் துறையினர் தாக்கியதற்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16:    ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவை நியமித்து மத்திய அரசு உத்தரவு. 

23:    ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவைத் தோற்கடித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், மாநில முதல்வராகப் பதவியேற்க கூட்டணிக் கட்சிகள் ஆதரவு.

24:    ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் திரெளபதி முர்முவிடம் முறைப்படி கடிதம் அளித்தார் ஹேமந்த் சோரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com