
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ராக்கெட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜுலாஸ் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாக்குதல் நடத்தினர். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தப் பகுதியில் கிராம மக்கள் நடமாட்டம் இருந்ததால், அந்நாட்டு ராணுவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கவில்லை.
காஷ்மீர் பிரிவினையை ஊக்குவித்து ஆண்டுதோறும் பிப்ரவரி 5ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம்' என்ற பெயரில் பேரணிகள் நடைபெறும். இந்தத் தினத்துக்கு பாகிஸ்தான் தேசிய விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்தத் தினத்தில் வேண்டுமென்றே அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த மாதமும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கடந்த ஆண்டில் மட்டும் 2,936 முறை அந்நாட்டு ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரிப்பு': காஷ்மீரில் முந்தைய 4 ஆண்டுகளைக் காட்டிலும் கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களில் முந்தைய 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல் கணிசமாகக் குறைந்துவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டில் மட்டும் 614 பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறின. இதில், 91 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் 257 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...