
பாரத ரத்னா, பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட மாநிலங்களவை முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் 5 பேருக்கு மாநிலங்களவையில் அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார்.
மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலையில் கூடியதும், இவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, மறைந்த நானா தேஷ்முக் ஆகியோர் இந்த அவையின் முன்னாள் உறுப்பினர்கள். பொது விவகாரங்கள் மற்றும் சமூகப் பணி முறையே சிறந்த சேவை ஆற்றியதற்காக இருவரும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மறைந்த உறுப்பினர் குல்தீப் நய்யார் இந்த அவையின் முன்னாள் நியமன உறுப்பினராக இருந்தவர்.
ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ் இந்த அவையின் முன்னாள் உறுப்பினர், தற்போதைய மக்களவை உறுப்பினரும் ஆவார்.
சர்தார் சுகதேவ் சிங் தின்ட்ஷா மாநிலங்களவையின் தற்போதைய உறுப்பினர். இவர்கள் மூவரும் இதழியல் மற்றும் பொது விவகாரங்கள் துறை முறையே சிறந்த சேவை புரிந்தமைக்காக பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் மதிப்புமிக்க விருதுகளுக்காக இந்த அவையின் நான்கு முன்னாள் உறுப்பினர்களும், ஒரு தற்போதையை உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே பெருமை அளிப்பதாகும்.
பிரணாப் முகர்ஜி: பாரத ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ள பிரணாப் முகர்ஜி, 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மத்திய அரசில் அமைச்சர் பதவிகளை வகித்தவர். மாநிலங்களவையின் உறுப்பினராக மூன்று முறை இருந்தவர்.
நானா தேஷ்முக்: நானா தேஷ்முக், சிறந்த சமூக சேவகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு கிராமங்களில் மக்கள் பங்களிப்புடன் முழு வளர்ச்சியின் மூலம் முழு மாற்றத்தைக் காண கனவு கண்டவர். ஆச்சார்யா வினோபா பாவே தொடங்கிய பூதான் இயக்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றியவர். 1999-இல் பத்ம பூஷண் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.1999 - 2005 வரை மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்தவர்.
குல்தீப் நய்யார்: மறைந்த குல்தீப் நய்யார் ஒரு முதுபெரும் பத்திரிக்கையாளர். முன்னாள் உள்துறை அமைச்சர்கள் லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லப் பந்த் ஆகியோரின் ஊடக அதிகாரியாகப் பணியாற்றியவர். பல்வேறு ஊடக நிறுவனங்களிலும், செய்தி ஏஜென்சிகளிலும் பணியாற்றியவர். 1997 - 2003 வரை மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்தார்.
ஹுக்கும் தேவ் நாராயண் யாதவ்: ஹுக்கும் தேவ் நாராயண யாதவ் பிகார் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்தவர். தற்போதையை 16-ஆவது மக்களவையின் உறுப்பினராக இருப்பவர். 1980 - 1986-இல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், மத்திய அமைச்சர்கள் குழுவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருதைப் பெற்றவர்.
சர்தார் சுகதேவ் சிங் தின்ட்ஷா: பஞ்சாப் சட்டப்பேரவையில் உறுப்பினராகத் தொடர்ந்து பல முறை பல்வேறு காலகட்டங்களில் இருந்தவர். அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
14-வது மக்களவை உறுப்பினராக 2004-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராகவும் இருந்தவர். 1998-இல் முதல் முறையாக மாநிலங்களவையின் உறுப்பினரானார்.
2010, 2016 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு தர்ம ஸ்தாபன அறக்கட்டளைகளின் தலைவராகவும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
விருதுக்குத் தேர்வாகியுள்ள ஐந்து பேரையும் அவையின் சார்பில் பாராட்டுகிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...