
பிரதமர் மோடியை புது தில்லியில் சந்தித்துப் பேசிய மொனாகோ அரசர் ஆல்பர்ட்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை மொனாகோ அரசர் ஆல்பர்ட் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
ஐரோப்பிய நாடான மொனாகோவின் அரசர் ஆல்பர்ட் இந்தியாவுக்கு ஒரு வார பயணமாக கடந்த திங்கள்கிழமை வந்தார்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியை செவ்வாய்க்கிழமை அவர் சந்தித்தார்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
கடந்த 2007ஆம் ஆண்டில் மொனாகோவுடன் ராஜீய ரீதியிலான உறவு தொடங்கியது. அந்நாட்டுடான நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும். முன்னதாக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் ஆல்பர்ட் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
அப்போது, இந்தியாவில் முதலீடு செய்வது, பொலிவுறு நகரங்கள் திட்டம், சுற்றுலா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார் ரவீஷ் குமார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஆல்பர்ட் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், மொனாகோ உடனான நட்புறவும், பரஸ்பர ஒத்துழைப்பும் தொடர்ந்து நீடிக்கும். அந்நாட்டு அரசரின் இந்தியப் பயணம், இரு நாட்டு உறவை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மொனாகோ அதிகாரிகள் இந்தியாவுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாமல் வருவதற்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா-மொனாகோ வர்த்தக மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். வரும் 10ஆம் தேதி அவர் தாய்நாடு திரும்புகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...