
ஹிமாசலப் பிரதேச மாநிலத்துக்கான புதிய நிர்வாகிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நியமித்தார். இதில், மாநில முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யாவுக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இந்நிலையில், ஹிமாசலப் பிரதேசத்துக்கான புதிய நிர்வாகிகளை ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக குல்தீப் சிங் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா, மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வீரபத்ர சிங், அவரது மனைவியும் முன்னாள் எம்.பி.யுமான பிரதீபா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு உள்ளிட்ட 14 மூத்த தலைவர்கள் மாநில காங்கிரஸ் கமிட்டியின் நிரந்தர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில எம்எல்ஏவான விக்ரமாதித்யா, மாநில இளைஞரணியின் முன்னாள்
தலைவராகவும் இருந்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...