
குஜராத்தில் 26 ரதங்களுடன் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை பாஜக செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ரதங்களை மாநில முதல்வர் விஜய் ரூபானி கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முழுவதும் காவி வண்ணமிடப்பட்டுள்ள இந்த ரதங்கள், வேன்களை மாற்றி அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. 26 மக்களவைத் தொகுதிகளிலும் அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த ரதங்கள் பயணிக்கும். அப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.
இந்த ரதங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் விஜய் ரூபானி கூறியதாவது:
இந்தியாவில் இதற்கு முன்பு எந்தக் கட்சியும் மக்களிடம் பெரிய அளவில் கருத்துகளைக் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்தது இல்லை. அரசியலில் பல விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கும் பாஜக, இந்த விஷயத்திலும் புதிய உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எந்தக் கட்சியும் இதுபோன்ற மக்கள் பங்களிப்பு வாய்ந்த தேர்தல் அறிக்கையை தயாரித்தது இல்லை. கட்சியின் தலைமையகங்களில்தான் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இப்போது, மக்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் வகையில் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...