
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அமையவுள்ள முதல் ஹிந்து கோயிலுக்கு வரும் ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக, துபையில் வெளியாகும் கல்ஃப் நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2015-ஆம் ஆண்டு அமீரகத்துக்கு சென்றபோது, இந்த கோயில் அமைப்பதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
போச்சாசன்வசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா என்ற சர்வதேச ஹிந்து அமைப்பு இந்தக் கோயிலைக் கட்டுகிறது. வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் அக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா, அந்த அமைப்பின் தற்போதைய தலைவர் மஹந்த் ஸ்வாமி மஹராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையது பரிசாக வழங்கிய 13.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் இந்தக் கோயிலில், வாகன நிறுத்த வசதிக்காக ஐக்கிய அரபு அமீரக அரசும் அதே அளவு நிலத்தை பரிசாக வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பில் இருக்கும் 7 அமீரகங்களை பிரதிபலிக்கும் வகையில் அந்தக் கோயில் 7 கோபுரங்களுடன் கட்டப்படவுள்ளது.
இந்தக் கோயிலுக்கான சிற்ப வேலைகளை இந்திய கலைஞர்கள் மேற்கொள்கின்றனர். கோயிலுக்கான இளஞ்சிவப்பு நிற கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், பளிங்கு கற்கள் மாசிடோனிய நாட்டிலிருந்தும் வரவழைக்கப்படவுள்ளன.
இதுவரையில், துபையில் இருக்கும் சிவன் மற்றும் கிருஷ்ணருக்கான கோயிலே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஒரே ஹிந்து கோயிலாகும்.