
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில், சந்தேகத்துக்கிடமான ஆள் நடமாட்டத்தை கண்டதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறுகையில், பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான ஆள் நடமாட்டத்தை வீரர்கள் கண்டுள்ளனர். அதையடுத்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும், பாதுகாப்பு படையினர் மீது ஊடுருவல்காரர்கள் எதிர் தாக்குதல் நடத்தவில்லை. இருப்பினும், பயங்கரவாதிகள் யாரேனும் மறைந்திருக்கிறார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினரும், மாநில காவல் துறையும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இதுவரை பயங்கரவாதிகள் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றார்.
பாகிஸ்தான் அத்துமீறல்: இதனிடையே, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவ படையினர் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கெர்னி செக்டார் பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகேயுள்ள ராணுவ முகாம்கள் மீது திங்கள்கிழமை காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்களும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 7 மணி நேரம் வரை இந்த மோதல் நீடித்தது. எனினும், இருதரப்பிலும் எவ்வித உயிரிழப்பும் இல்லை. இரு தரப்பினருக்கும் இடையே 6 மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். பாதுகாப்பு கருதி, சீரமைப்பு பணிகள் முடியும் வரை மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.