
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில், மாநிலத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது வரும் ஜூலை மாதம் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில், கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சபர்மதி விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஆமதாபாதிலுள்ள குல்பர்க் சொஸைட்டியில் நிகழ்ந்த கலவரத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக மாநிலத்தின் அப்போதைய முதல்வர் மோடி, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு விசாரணைக் குழு, கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் மோடி, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி, அவர்கள் அனைவரையும் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில், கலவரத்தில் உயிரிழந்த முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வந்ததாகக் கூறி, ஜாகியாவின் மனுவைக் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஜாகியாவின் நியாயமான கோரிக்கையை உயர்நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி, அவரது வழக்குரைஞர் அபர்ணா பட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்தான விரிவான விசாரணை வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.