குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: முழு அடைப்பால் நாகாலாந்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகாலாந்து மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 10 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டத


நாகாலாந்து மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 10 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்தால் மாநிலத்திலுள்ள பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டன. காலை 6 மணி முதல் தொடங்கிய இந்த போராட்டத்தால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லை. மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் முக்கிய வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை.  
கடந்த பிப். 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட நாகாலாந்து கோன் பர்ஹாஸ் கூட்டமைப்பு (என்ஜிபிஎஃப்), பழங்குடியினர் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு குடிமக்கள், சிவில் சங்கங்கள் கொண்ட கூட்டு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற கூட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) தனது ஆதரவை தெரிவித்திருந்தது. 
கடந்த ஜனவரி 8ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாகாலாந்து மாநில அமைச்சரவைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. 
தற்போது, பாஜக தலைமையிலான நாகாலாந்து ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநில அரசும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அது மக்களுக்கிடையே பாதகமான தாக்கங்களையே ஏற்படுத்தும். இதனால்தான் ஒட்டு மொத்த மக்களும் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் நாகாலாந்து பிரச்னையை தீர்க்க முயலாமல் மத்திய அரசு இந்த குறைபாடுள்ள அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு தனது குடிமக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு மாறாக அவர்களின் நம்பிக்கையை தவறாக்க நினைக்கிறது என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com