
தில்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்த சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, அந்த மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தில்லியில் திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
தில்லியிலுள்ள ஆந்திர பவனில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
குஜராத்தில் மோடி ஆட்சி செய்தபோது ராஜ தர்மத்தை பின்பற்றவில்லை என வாஜ்பாய் ஒருமுறை தெரிவித்தார். ஆந்திரப் பிரதேச விவகாரத்திலும் தற்போது ராஜ தர்மத்தை மோடி பின்பற்றவில்லை. ஆந்திரத்துக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஆந்திரத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. இந்த அநீதி தேசிய ஒருமைப்பாட்டில் எதிர்வினைகளை உருவாக்கும். 5 கோடி ஆந்திர மக்கள் சார்பாக மத்திய அரசை எச்சரிக்கிறேன்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். வருவாய்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரத்துக்கு மத்திய அரசு ரூ.16,000 கோடி அளித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ. 3,900 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
புந்தேல்கண்டுக்கு வழங்கியது போல ராயலசீமா, ஆந்திரத்தின் வடக்கு கடற்கரையோர ஏழு மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மாவட்டத்துக்கு ரூ.50 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குண்டூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற மோடி, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியுள்ளார். எங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்ததால்தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தோம். ஆந்திரத்தின் சுயமரியாதை, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதை பொறுத்துக் கொள்ளமாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம். நாட்டை ஆளும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார். கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் எங்கள் கோரிக்கையை வென்றெடுப்போம் என்றார் அவர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, லோக் தந்திரிக் ஜனதா கட்சித் தலைவர் சரத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், தில்லி முதல்வர் கேஜரிவால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவரிடம் இன்று மனு
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழுவினர் மனு அளிக்க உள்ளனர். இக்குழுவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பொய்யுரைக்கும் மோடி
போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், செல்லும் இடமெல்லாம் பொய் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பிரதமர். ஆந்திரத்துக்கு செல்லும் போது சிறப்பு அந்தஸ்து குறித்தும், வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் போது அதற்கு ஏற்றாற் போலும் பொய்களைக் கூறி வருகிறார். ரஃபேல் ஒப்பந்த ஊழலுக்கு பிரதமர் மோடி வழி ஏற்படுத்தித் தந்துள்ளார். ஆந்திரத்துக்கான நிதியைத் திருடி, அனில் அம்பானிக்கு அளித்துள்ளார் என்பதே உண்மையாகும். பிரதமர் மோடியை வீழ்த்த, நாம் அனைவரும் இங்கு ஒன்று திரண்டுள்ளோம் என்றார்.
மன்மோகன் சிங்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என்றார்.