
பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ள சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து, 103-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த மாதம் நிறைவேற்றியது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தச் சட்டத் திருத்தத்துக்குத் தடை விதிக்க மறுத்திருந்தது. மேலும், இந்த மனுக்கள் மீது பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஈஸ்வரையா சார்பில் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மக்களின் பொருளாதார நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தில் வழியில்லை. எனவே, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முயல்வது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். மேலும், 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் இந்தச் சட்டத்திருத்தம் மீறியுள்ளது. எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.