

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அந்த பட்ஜெட் மீது மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக இடைக்கால பட்ஜெட் மக்களவையில் நிறைவேறியது. பட்ஜெட் நிறைவேற்றத்தின்போது, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 2019-20 காலகட்டத்துக்கான இடைக்கால பட்ஜெட்டும், அத்தகைய நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியே ஆகும்.
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என்ற வீதத்தில் ஓராண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனைகளில் வாழ்பவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணராமல், இத்திட்டத்தை சிறுமைப்படுத்தி விமர்சிக்கின்றனர்.
அரசு நிர்வாகத்தை பொருத்த வரையில், முன்பு காங்கிரஸால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை இந்த அரசு புதிதாக மாற்றியுள்ளது. நேர்மையாகச் செயல்படும் ஒரு அமைப்பை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். போலியான நிறுவனங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும். அதேவேளையில், நியாயமான நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கும் என்று பியூஷ் கோயல் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.