4 எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: கர்நாடக சட்டப் பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

காங்கிரஸில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை பதவி நீக்கம் செய்யுமாறு, கர்நாடக சட்டப் பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா மனு அளித்தார்.
Updated on
1 min read


காங்கிரஸில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை பதவி நீக்கம் செய்யுமாறு, கர்நாடக சட்டப் பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா மனு அளித்தார்.
பெங்களூரு விதானசெளதாவில் சட்டப் பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரை  சித்தராமையா சந்தித்து, அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ்ஜார்கிஹோளி, உமேஷ்ஜாதவ், நாகேந்திரா, மகேஷ்குமட்டஹள்ளி ஆகிய 4 பேரும் கட்சிவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  எனவே, அவர்களை சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்போது, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ், அமைச்சர் கிருஷ்ணபைரே கெளடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, ஹுப்பள்ளியில் சித்தராமையா நிருபர்களிடம் கூறியது:
சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதை மதிக்காமல் இருக்கும் 4 பேரை தகுதிநீக்கம் செய்ய பேரவைத் தலைவரை கேட்டுக்கொள்வோம்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடியை, நான் முதல்வராக இருந்தபோது இரு முறை சந்தித்து கேட்டுக்கொண்டேன். இப்போது காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசு பயிர்க்கடனை தள்ளுபடிசெய்தால், மோடி கோபப்படுவது ஏன்?  பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் குறித்து பேசும் பிரதமர் மோடி, ரஃபேல் போர்விமான முறைகேடு குறித்து பேசாதது ஏன்? 
மஜத எம்.எல்.ஏ. மகனுடன் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ விவகாரம் வெளியானதும் அது தான் அல்ல என்று கூறிய எடியூரப்பா, பின்னர் அது தனது குரல் தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படியானால், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். நாகன கெளடா மகன் சரண் கெளடாவிடம் எடியூரப்பா, உங்கள் தந்தைக்கு ரூ.10 கோடி, அமைச்சர் பதவி தருகிறோம். உனக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்கிறோம் என்று கூறியிருந்தார். இது குதிரைபேரம் அல்லவா?
முதல்வராக இருந்தவர் எம்.எல்.ஏ.க்களை கொள்முதல் செய்ய புறப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com