
சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் புதிய வரையறை கோரும் மனு குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவிலான மக்கள்தொகையை அடிப்படையாகக் கொள்ளாமல், மாநில அளவிலான மக்கள்தொகையை அடிப்படையாகக்கொண்டு சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையைத் திருத்தி அமைக்கக் கோரி பாஜக தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேசிய அளவிலான கணக்கீட்டின் அடிப்படையில், பெரும்பான்மையினராக விளங்கும் ஹிந்துக்கள், ஜம்மு-காஷ்மீர், சில வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டவற்றில் சிறுபான்மையினராக விளங்குகின்றனர். எனவே, சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் எதையும் அவர்கள் பெறமுடியாத சூழல் நிலவுகிறது. தற்போது வரை எந்த மாநில அரசும் ஹிந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிக்கவில்லை. இதனால், அவர்களது அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மாநில அளவிலான மக்கள்தொகைக் கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினரை அடையாளம் காண வேண்டும். சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, இந்த விவகாரம் குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிúஸாரம் உள்ளிட்ட மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்திலும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.