
குஜ்ஜார் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தை முன்வைத்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கேள்வி நேரத்தின்போது, பிஎஸ்பி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேசுகையில், குஜ்ஜார் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவரான குலாப்சந்த் கடாரியா பேசும்போது, ஆட்சிக்கு வந்த 10ஆவது நாளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியினர் இப்போது விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். கடன் தள்ளுபடி பெறுபவர்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் கூறுகையில், மாநிலத்தில் எத்தனை விவசாயிகள் கடனுதவி பெற்றுள்ளார்கள் என்பதை பாஜக குறிப்பிடவில்லை. மேலும், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது என்பது அரசுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும் என்றார்.
அமைச்சரின் பதிலால் அதிருப்தியடைந்த பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அரசை கண்டிப்பதாக கூறி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேல் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது.