விடியோகான் கடன் மோசடி விவகாரம்: ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் 

விடியோகான் கடன் மோசடி விவகாரத்தில், ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சாருக்கு சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸ் விடுத்துள்ளது.
விடியோகான் கடன் மோசடி விவகாரம்: ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் 

புது தில்லி: விடியோகான் கடன் மோசடி விவகாரத்தில், ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சாருக்கு சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸ் விடுத்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வாங்கி நிதி மோசடி செய்தது தொடர்பாக விடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த சமயத்தில் சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

ஐசிஐசிஐ வங்கியை ஏமாற்றி ரூ.3,250 கோடி கடன் வாங்கி நிதி மோசடி செய்தது தொடர்பாக விடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியை மோசடி செய்யும் வகையில், பிறருடன் சேர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு சந்தா கோச்சார் கடன் அளித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

சந்தா கோச்சார் தவிர்த்து, அவரது கணவர் தீபக் கோச்சார், தீபக்கின் நுபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனம், சுப்ரிம் எனர்ஜி, விடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், விடியோகான் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ், அவர்களுக்கு எதிராக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில்,  சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் தொடங்கிய நூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில் விடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் 64 கோடி ரூபாய் முதலீடு செய்தார். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே தூத், ஐசிஐசிஐ வங்கியிடம் கடன் கேட்டு அணுகினார். அவருக்கு மிகப்பெரிய தொகையாக  ரூ.3,250 கோடியை கடனாக ஐசிஐசிஐ வங்கி அளித்தது.  கோச்சாரின் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு பிரதிபலனாகவே விடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ வங்கி கடன் அளித்தது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மும்பை, ஒளரங்காபாத் உள்ளிட்ட இடங்களில் விடியோகான், நுபவர் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

விடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத், தீபக் கோச்சார், பெயர் குறிப்பிடப்படாத நபர்களுக்கு எதிராக சிபிஐ கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முதல்நிலை விசாரணைக்கான அறிக்கையை பதிவு செய்தது. அதையடுத்து தற்போது சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, நிதி மோசடி குற்றச்சாட்டு காரணமாக ஐசிஐசிஐ வங்கித் தலைவர் பதவியிலிருந்து சந்தா கோச்சார்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார்.

இந்நிலையில் விடியோகான் கடன் மோசடி விவகாரத்தில், ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சாருக்கு சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸ் விடுத்துள்ளது.

அதன்படி இந்த வழக்கில் சிபிஐ சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் ஆகிய மூவருக்கும் சிபிஐ 'லுக் அவுட் நோட்டிஸ்' பிறப்பித்துள்ளது.

இதன்படி, இவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படுகிறது. இந்த நோட்டிஸ் நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நுழைவு மற்றும் வெளியேற்ற பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com