பதிலடி ஆரம்பம்: ஒருபக்கம் அதிரடித் தாக்குதல்; மற்றொரு பக்கம் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு செக்!

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான வழக்கில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
பதிலடி ஆரம்பம்: ஒருபக்கம் அதிரடித் தாக்குதல்; மற்றொரு பக்கம் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு செக்!


ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான வழக்கில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்திய விமானப் படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே மற்றொரு பக்கம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வழக்கின் அடிப்படையில், காஷ்மீர் பிரிவினைவாதிகளான மிர்வாய்ஸ் உமெர் ஃபரூக் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகம் உட்பட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுடன், உள்ளூர் காவல்துறையினர், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹவாலா முறையில் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பணம் வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, பிரிவினைவாதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அந்த மாநில அரசு எடுத்தது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
பிரிவினைவாதத் தலைவர்கள் மிர்வாய்ஸ் உமர் பரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹாஷிம் குரேஷி, பசல் ஹக் குரேஷி, ஷப்பீர் ஷா ஆகிய 6 பேருக்கு பயங்கரவாதிகளால் இருக்கும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளித்து வந்தது. மிர்வாய்ஸ் உமர் பரூக்கின் தந்தை மிர்வாய்ஸ் ஃபரூக்கை கடந்த 1990-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இதேபோல், அப்துல் கனி லோனை கடந்த 2002-ஆம் ஆண்டில் கொலை செய்தனர். இதை பரிசீலித்து மேற்கண்ட 6 பிரிவினைவாத தலைவர்களுக்கும் மாநில அரசு பாதுகாப்பு அளித்தது. அதேநேரத்தில் தீவிர நிலைப்பாட்டை வலியுறுத்தி வரும் பிரிவினைவாதத் தலைவர்களான சையது அலி ஷா கிலானி, யாசின் மாலிக் ஆகியோருக்கு மாநில அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.

புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து ஆய்வு நடத்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த வாரம் வந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில அரசின் பாதுகாப்பில் இருக்கும் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானிடம் இருந்தும், அந்நாட்டின் உளவுத்துறையிடம் இருந்தும் நிதியுதவி பெறுவதாகவும், இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதன்படி, 6 பிரிவினைவாதத் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு திரும்பப் பெற்றது.

பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கும், அவர்களின் வீட்டுக்கும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் திரும்பப் பெறப்பட்டனர். இதேபோல், பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிற சலுகைகளையும் திரும்பப் பெறுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


பின்னணி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் கடந்த 14ம் தேதி தாக்குதல் நடத்தினார். வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி வெடிக்க செய்தார். இதில் பேருந்தில் சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உடல்சிதறி பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என்று அறிவித்தார். பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் இந்தியா திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் 6 பேரின் போலீஸ் பாதுகாப்பை ஜம்மு-காஷ்மீர் அரசு வாபஸ் பெற்றுள்ளது. அவர்களது வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வரும் அதே வேளையில், ஜெய்ஷ் - இ - மொஹம்மது பயங்கரவாத முகாம்கள் அதிரடி தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com