சபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் சுவாமி தரிசனம்: மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில், முதல்முறையாக 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள்  சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோயில் நடையை அடைத்து, புனிதச் சடங்குகளை மேற்கொள்ளத் தயாராகும் மேல்சாந்திகள்.
சபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள்  சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோயில் நடையை அடைத்து, புனிதச் சடங்குகளை மேற்கொள்ளத் தயாராகும் மேல்சாந்திகள்.


சபரிமலை ஐயப்பன் கோயிலில், முதல்முறையாக 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பாஜகவினரும், அக்கட்சியின் இளைஞரணியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள்பட்ட பெண்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதன்பிறகு, அந்த வயதுக்குள்பட்ட பெண்கள் இருவர் முதல்முறையாக சுவாமியை வழிபட்டுள்ளனர்.
கோயிலில் புனிதச் சடங்கு:
சபரிமலையில் 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோயில் நடை அடைக்கப்பட்டது.
பின்னர், சந்நிதானத்தை புனிதப்படுத்துவதற்கான சடங்குகளை ஐயப்பன் கோயில் தலைமை தந்திரி மேற்கொண்டார்.
முன்னதாக, புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
3.38 மணியளவில் 2 பெண்களும் நுழைந்து தரிசனம் செய்தனர். இதையடுத்து, காலை 10.30 மணிக்கு கோயில் நடையை அடைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நடை அடைக்கப்பட்ட பிறகு, சன்னிதான வளாகத்திலிருந்து பக்தர்கள் அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர், சந்நிதான வளாகத்தை புனிதப்படுத்துவதற்கான சடங்குகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் 2 பேர் சுவாமி தரிசனம் செய்த தகவல் வேகமாகப் பரவியதை அடுத்து, சபரிமலையில் பதற்றமான சூழல் உருவானது.
பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய போலீஸார் உதவியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசின் உத்தரவின் பேரிலேயே இது நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியும் பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ், பாஜக கடும் தாக்கு: இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:
ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை முதல்வர் பினராயி விஜயன் புண்படுத்திவிட்டார். அவரின் உத்தரவுபேரில் போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது, பினராயி விஜயனிடம் இருக்கும் பிடிவாத குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. சந்நிதானம் நடை அடைக்கப்பட்டதும், புனிதச் சடங்குகள் செய்யப்பட்டதும் 100 சதவீதம் சரி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராடும் என்று அவர் கூறினார். 
கேரள பாஜக தலைவர் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், பக்தர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட்டன. ஐயப்பனின் கோபத்துக்கு மாநில அரசும், முதல்வர் பினராயி விஜயனும் ஆளாவார்கள் என்றார்.
பினராயி விஜயன் விளக்கம்: சுவாமி தரிசனம் செய்த பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பெல்லாம், சில தடைகள் இருந்ததால் சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் இருந்தனர். தற்போது, எந்தப் பிரச்னையும் இல்லாததால் சபரிமலைக்கு அவர்கள் சென்று திரும்பினர். அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர் என்றார். 
யார் அந்த 2 பெண்கள்?: சுவாமி தரிசனம் செய்த 2 பெண்கள் அடையாளம் தெரியவந்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த கனகதுர்கா (42), பிந்து (44) ஆகிய இருவரும் கருப்பு உடை அணிந்து தலையை மறைத்துக் கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் விரிவுரையாளராக பிந்து பணிபுரிந்து வருகிறார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியை சேர்ந்தவர்.
கனகதுர்கா, கேரள பொது விநியோகத் துறையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதியே இருவரும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய முயற்சி செய்து முடியாமல் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 2 பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த சபரிமலை பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com