
அசோஸியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு, ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் நிலம் மறுஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, மற்றொரு மூத்த தலைவர் மோதிலால் வோரா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வரும் அசோஸியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு, பஞ்ச்குலாவில் கடந்த 2005-ஆம் ஆண்டு நிலம் மறுஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, மற்றொரு மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி பஞ்ச்குலாவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், நிலம் மறுஒதுக்கீடு மூலம் அரசுக்கு ரூ.67 லட்சம் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் முன்பு வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ஹூடா, வோரா ஆகியோரைப் பிணையில் விடுவிப்பதாகவும், பிணைத்தொகையாக தலா ரூ.5 லட்சத்தை அவர்கள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஹூடாவிடமும், மோதிலால் வோராவிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, அசோஸியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு மறுஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை முடக்கியது.
அசோஸியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு, நிலம் மறுஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஹூடா தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...