
அறிவியலும் தொழில்நுட்பமும் நாட்டை வளர்ச்சியடையச் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் 106-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வருங்கால இந்தியா-அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:
வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க என்று மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி கூறினார். அதில் விஞ்ஞானிகள் வாழ்க என்பதை மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இணைத்தார். அவற்றுடன், ஆராய்ச்சி வாழ்க என்பதையும் நான் இணைக்க விரும்புகிறேன். இந்திய அறிவியல் அறிஞர்கள், தங்களது ஆழமான நுண்ணறிவை தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அறிவியலும் தொழில்நுட்பமும் நாட்டை வளர்ச்சியடையச் செய்கின்றன. அவை இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.
விமானங்களில் பயன்படுத்தும் உயிரிஎரிபொருள், பார்வையற்றோருக்கு உதவும் இயந்திரம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய், டெங்கு போன்றவற்றை மிகக் குறைந்த செலவில் கண்டறியும் சாதனம், நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பு உள்ளிட்டவற்றை இந்திய அறிவியலறிஞர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் உருவாக்கியுள்ளனர்.
அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இன்னும் பலமைல் தூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதன்மூலம், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...