
இந்தியாவில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு முதல் 100 நாள்களில் சுமார் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அனைவருக்கும் பயன்படும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த சுகாதார திட்டத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள 50 கோடி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு வழங்கும் நோக்கில், இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் 100 நாள்களில் 6.85 லட்சம் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், 5.1 லட்சம் பேர் காப்பீடு கோரியதுடன், அவர்களுக்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜனவரி 1-ஆம் தேதி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 16,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாகவும் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை தனியார் மருத்துவமனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.