
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அண்மைக் காலமாக அரசியல்வாதிகள், தொழில் துறையினர் இல்லங்கள், அலுவலகங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வந்த வருமான வரித் துறையினர், முதன்முறையாக கன்னட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பட விநியோகஸ்தர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், யஷ், சுதீப், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், தயாரிப்பாளரும், சட்டமேலவை உறுப்பினருமான சி.ஆர்.மனோகர், பட விநியோகஸ்தர் ஜெயண்ணா உள்பட அவர்களின் உறவினர்கள் 10 பேரின் இல்லங்கள், அலுவலங்கங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 15 நாள்களாக பெங்களூரு, கோவா, சென்னை, ஹைதராபாத், அமராவதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 200-க்கும் அதிகமான வருமான வரித் துறை அதிகாரிகள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பட விநியோகஸ்தர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் சோதனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வந்தனர். இந்த தகவல் கசியாமல் இருக்க ரகசியம் காக்கப்பட்டது. இதன் காரணமாக சோதனையில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பட விநியோகஸ்தர்களிடமிருந்து பெருமளவிலான ரொக்கப் பணம், தங்கநகை, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.