
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இதுவரை நீடித்து வந்த கடுமையான குளிரின் தாக்கம் வியாழக்கிழமை சற்று தணிந்தது. இருப்பினும், காஷ்மீரின் பிறப்பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு நீடிப்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதுகுறித்து, வானிலை மையத்தினர் தெரிவித்ததாவது: ஸ்ரீநகரில் புதன்கிழமை 0.2 டிகிரி செல்ஷியஸாக இருந்த வெப்பநிலை வியாழக்கிழமையும் அதே அளவில் நீடித்தது. இதுவரை உறைநிலைக்கும் கீழே இருந்த வெப்பத்தின் அளவு சற்றே மேம்பட்டிருந்தது.
காஸிகுண்டு பகுதியில் மைனஸ் 0.4 டிகிரி செல்ஷியஸாகவும், கோகர்நாக் நகரப்பகுதியில் 3.2 டிகிரி செல்ஷியஸாகவும், குப்வாராவில் 3 டிகிரி செல்ஷியஸாகவும் பதிவாகி இருந்தது.
பாஹல்காம் பகுதியில் மைனஸ் 7.3 டிகிரி செல்ஷியஸாகவும், சுற்றுலாத்தலமான குல்மார்கில் மைனஸ் 8.5 டிகிரி செல்ஷியஸாகவும் இருந்தது.
லே நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மைனஸ் 12.4 டிகிரி செல்ஷியஸாக இருந்த பனிப்பொழிவு புதன்கிழமை இரவில் மைனஸ் 13.3 டிகிரி செல்ஷியஸாக குறைந்தது. கார்கில் பகுதியில் மாநிலத்திலேயே குறைந்த அளவாக மைனஸ் 17.6 டிகிரி செல்ஷியஸாக பதிவானதாக தெரிவித்தனர்.