
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட வரும் 50 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்து வருவதால், மற்ற பக்தர்களின் உரிமைகளும், பாதுகாப்பும் பாதிக்கப்படுவதாக கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, கண்காணிப்புக் குழு உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அண்மைக் காலமாக பல பெண்கள் கோயிலில் வழிபட முயற்சிக்கின்றனர். அப்போது, காவல் துறையினர் அதிகளவிலான பாதுகாப்பை அவர்களுக்கு அளிக்கின்றனர். இதனால், மற்ற பக்தர்கள் மிகநீண்ட வரிசையில் நின்று, கோயிலில் வழிபாடு நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தனிநபர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதால், மற்ற பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளும், பாதுகாப்பும் பாதிக்கப்படுகிறது. 50 வயதுக்குக் குறைவான பெண்கள் வழிபட முயற்சிப்பதால் பக்தர்களிடையே கடும் பதற்றம் ஏற்படுகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரையிலுள்ள பாதையின் இருபுறமும் பள்ளங்கள் இருப்பதால், திடீரென ஏற்படும் பதற்றம் காரணமாக பக்தர்கள் அதில் விழுந்து காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கோயிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் வழிபாடு நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...